29 August 2011

ஃபித்ராவின் சிறப்பும் +பெருநாள் வாழ்த்தும் !

 அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்......


புனித  ரமலான்  முழுவதும்  பகல்  பொழுதில்  நோன்பிருந்து, இறுதி  நோன்பை  முடித்து, அதற்கடுத்த  தினம்  ஈகைப்  பெருநாளை  கொண்டாடி  மகிழ்கிறோம். பத்தாடை  அணிந்து, நறுமணம்  பூசி,சுவையான  உணவுகளை  உண்டு  கழிக்கிறோம். அல்லாஹ்வுக்கு  நன்றி  கூறுகிறோம். இவ்வாறு  மகிழ்வுடன்  இருக்கும் போது நம்  கண்ணெதிரில், நம்  பக்கத்து  வீட்டில்,அடுத்த  தெருவில் நம்மைச்  சுற்றி  எத்தனையோ  ஏழைகள்-சகோதர,சகோதரிகள் நம்மைப் போன்றே  நோன்பு  நோற்று  விட்டு பெருநாளை  மகிழ்ச்சியுடன்  கொண்டாட முடியாமல்  வாடிக்  கொண்டிருப்பார்கள். இந்நிலை ஏற்படாமல் வசதி  படைத்தவர்களைப்  போன்றே எல்லாமக்களும்  மனங்குளிர  உணவருந்த வேண்டும்  என்பதற்காக  இறைவனால்  வழங்கப்பட்ட  திட்டம்  தான்  பித்ரா  எனும்  பெருநாள்  தர்மம்  ஆகும்.


முஸ்லிமான  ஆண்,பெண்,சிறியவர்,பெரியவர்,பணியாட்கள் அனைவருக்காகவும் பெருநாள் தர்மத்தை  நபி {ஸல்} கடமையாக்கினார்கள்  என்று  இப்னு உமர் {ரலி} அறிவிக்கிறார்கள்.{நூல் புகாரி}

உணவு பொருட்களாகவோ,பணமாகவோ  பித்ராவை  வழங்கலாம்.
பெருநாளைக்கு  சில  தினங்கள்  முன்பாகவே  இதனை  வழங்குதல்  சிறப்பாகும் நபித்  தோழர்கள்  பித்ராவை பெருநாளைக்கு சில நாட்கள்  முன்பாகவே  கொடுத்து  வந்தனர் என்று இப்னு உமர் {ரலி} அறிவிக்கிறார்கள்.{நூல் புகாரி}


பெருநாள் தொழுகைக்கு  முன்னரே பித்ராவை கொடுத்துவிடுமாறு  நபி{ஸல் அவர்கள்  கூறியதை,இன்றைய  மக்கள்  பெருனாளன்று  காலையில்  ஏழைகளைத்  தேடுமளவு  ஆக்கி  கொண்டார்கள்.


பித்ரா தரமானதாகவும்  பிறர்  உண்ணும் வகையிலும் இருக்க வேண்டும்.
ஒருவர்  மட்டகரமான  பேரிச்சம்பழத்தை  கொண்டு வந்தார். அதை நபியவர்கள்  பெற்று கொள்ளாமல்,  அதை கணக்கில் எடுத்து  கொள்ள வேண்டாம்  என்று  தடுத்து  விட்டார்கள். இப்னு உமர் {ரலி} அறிவிக்கிறார்கள்.{நூல் புகாரி}

  
நபித்தோழர்கள் காலத்தில்  இருகைகளால்  உணவு பொருகளைப் வாரி வழங்கி  அதனை  ஒரு  ஸாவு என கண்கிட்டார்கள்.

இருகைகளையும் சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்குமுறை அள்ளி அளந்து போடுவதே ஒரு 'ஸாவு' என்பதன் அளவாகும்.
இரண்டரை கிலோ கொண்ட ஒரு அளவாகும்.


நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கோதுமை - பேரீத்தப்பழங்கள் பெருநாள் தர்மமாக கொடுக்கப்பட்டதால் நாமும் அதையே கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. இன்றைக்கு நம்முடைய உணவு முறை எதுவாக இருக்கிறதோ அதைத்தான் உணவாகவோ அல்லது பணமாகவோ கொடுக்க வேண்டும்.



பித்ரா  நோக்கத்தையும், அதன்  சுன்னத்தான  முறையையும்  நாம் உணர்ந்து, ஏழை  முஸ்லீம்களையும் சந்தோஷமாக  பெருநாள்  கொண்டாட  வகை  செய்வோம். அல்ஹம்துலில்லாஹ் ....

                                                                

                                                                
அஸ்ஸலாமு  அலைக்கும்  வரஹ் ...                                                              

                அனைவருக்கும்  ஈத்  பெருநாள்  நல் வாழ்த்துக்கள்.  


                                                              உங்கள் சகோதரி 
                                                               ஆயிஷா  அபுல் .


புனித ரமலான் மாதமும் நம்மை கடந்து செல்கிறது. பிரிய மனமின்றி ஏக்கத்துடன் விடை கொடுப்போம்.எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!
 

19 August 2011

புனிதமான இரவு {லைலத்துல் கத்ர்}

அஸ்ஸலாமு  அழைக்கும்  வரஹ்மதுல்லாஹி  வபரகாத்துஹு
                                      
                                    
                                                                        
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)        

1. நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.

2. மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

3. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். 


4. அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின்      கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். 

5. சாந்தி (நிலவியிருக்கும்),; அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். 

                         
லைலத்துல் கத்ரின் சிறப்புகள் இங்கே  படிக்கவும்.

11 August 2011

புனித ரமளானில் நாம் !

                                                                              
                                                                        

அஸ்ஸலாமு  அழைக்கும்  வரஹ்மதுல்லாஹி  வபரகாத்துஹு 


உலகத்தையே  படைத்தாளும்  வல்ல  இறைவனாகிய   அல்லாஹ்  இந்த 
ரமலானையும்   நமக்கு  வழங்கி  கருணை புரிந்திருக்கிறான்.முதலாவதாக 
இறைவனிடத்திலிருந்து   ஓர்  அருட்கொடை  வழங்கப்பட்டால்  உடனே நாம் இறைவனுக்கு   நன்றி  செலுத்திட  வேண்டும். அருட்கொடைகளில்   சிறந்த 
ரமலானை  வழங்கியதற்காகவும்  அல்லாஹ்வுக்கு   அதிகமாக  நன்றி செலுத்த  வேண்டும்.

 
இறுதி   தூதரான   முகம்மத்  {ஸல்லல்லாஹு  அலைஹிவஸல்லம்}
அவர்கள்   ரமலான்  மாதம்   வந்ததும்  தோழர்களிடம்  மகிழ்ச்சியை  வெளிப்படுத்தி  நற்ச்செய்தியை  கூறுகிறார்கள் ......
இம்மாதத்தில்  அல்லாஹ்   உங்கள்  மீது  நோன்பை   கடமையாக்கி  உள்ளான். சொர்கத்தின்  கதவுகளை  உங்களுக்குகாக  திறந்து  வைக்கிறான்.
நரகத்தை   சாத்தி  வைக்கிறான்.


மக்கள்   அனைவரும்  உலக  விசயங்களில்  செயல்  பட  துல்லியமாக        திட்ட  மிடுகிறார்கள்.  ஆனால்  மறுமை   வாழ்வுக்காக  எந்த  திட்டமிடுதலும் இல்லாமல்   அலட்சியமாக   உள்ளனர். உண்மையான  நிரந்தமான வாழ்க்கை  எது  என்பது  பற்றி  இறை  நம்பிக்கையாளர்கள்  நன்றாக அறிந்திருக்க  வேண்டும்.  அதற்காக  இந்த  ரமலானைக்  கொண்டும்  முடிந்த அளவு   மறுமை  பயன்களை  அடைந்திட  திட்டமிட  வேண்டும்.  



தன்  மனதை  கட்டுப்படுத்தி  மறுமை  வாழ்வுக்காக  திட்டமிட்டு  செயல்படுபவன்  தான்  புத்திசாலி  என்று  நபி  {ஸல்} அவர்கள்  கூறுகிறார்கள்.இவ்வகையில்  மனதோடு  போராடும்  தன்மையை  வளர்த்து அல்லாஹ்வுக்கும்,  அவனுடைய  தூதருக்கும்  முற்றிலும்  அடிபணியக்  கூடிய பண்பை  வழங்குகிறது புனித  ரமலான் .  இந்த  பயிற்சியை  ரமலான்  நமக்கு வழங்குவதால்  தான்  நபி  {ஸல்}  அவர்கள்  மிகுந்த  முக்கியத்துவம்  அளித்து,சத்திய   தோழர்களையும்  உற்சாகமூட்டியுள்ளார்கள்.


நோன்புக்கு  நானே  கூலியாவேன்  என்று  வாக்குறுதி  அளித்துள்ள  அல்லாஹ்  அதற்கு  சில  நிபந்தனைகளையும்   விதிக்கிறான். செயல்களின் 
தரத்தைப்  பொறுத்து  எண்ணத்  தூய்மையை  பொறுத்து  ஒவ்வொரு 
நற்செயலுக்கும்  பத்து  முதல்  எழுநூறு  மடங்குவரை  நன்மைகளை  வழங்குகின்ற  அல்லாஹ்,  நோன்பாளி  தன்  பசியையும்,  இச்சையும், தாகத்தையும்  தனக்காகவே  பொறுத்துக்  கொள்கிறான்  என்பதால்  அதற்கான கூலியை   தானே  வழங்குவதாக--நானே கூலியாக  ஆகி  விடுவதாக  கூறுகிறான். அந்த  பெரும்  நல்வாய்ப்பை  பெற  வேண்டுமென்றால்  அதற்கு சில  தகுதிகளை  விதிகின்றான்.
                      
                                                                              

இதை  அல்லாஹ்வுடைய  தூதர்{ஸல்}அவர்கள்  தெளிவு  படுத்துகிறார்கள்.

பொய்  பேசுவதை  விட்டும், பொய்யான  காரியங்களை  விட்டும்  விலகி 
விடாமல், அவர்கள்  பட்டினி  கிடப்பதாலும்  தாகத்துடன்  இருப்பதாலும் 
இறைவனுக்கு  எந்தத்  தேவையுமில்லை .{அஹ்மத்  புகாரி }

சாப்பிடாமல்,  குடிக்காமல்  இருப்பதெல்லாம்  நோன்பாகாது . வீணான 
ஆபாசமான  செயல்களை  விட்டும்  விலகி   இருப்பதுதான்  நோன்பாகும் .

மேலும்  இறைவழியில்  செலவழிப்பது , வாரி  வழங்குவது,  அன்பையும், 
ஆதரவையும்   வெளிப்படுத்துவது, ஆதரவற்றவர்களை  ஆதரிப்பது,         தேவையுடையவர்களை   தேடிச்சென்று  உதவுவது  முதலான   சமூக  சேவைகளை  ரமலான்  நமக்கு  பயிற்சியளிக்கிறது .

ஆதரவற்றவர்களுக்காகவும்,  வறியவர்களுக்காகவும்  பாடுபடுபவன்  இறைவழியில்  போராடும்  வீரத்  தியாகியைப்  போன்றவன்  அல்லது 
இரவு  முழுக்க  நின்று  தொழுது,  பகல்  முழுக்க நோன்பிருந்தவனைப்  
போன்றவன்  என்று   நபி {ஸல்}  அவர்கள்  கூறுகிறார்கள் .{புகாரி  முஸ்லிம்}



நபியவர்களின்   மேற்கண்ட  உயர்ந்த  நற்செயல்களில்  ஈடுபட்டு,  நாம் 
நிறைவான  நோன்பை  வைத்து,  நம்முடைய  மனதின்  கடிவாளத்தை முழுக்க  முழுக்க நம்  பிடிக்குள்  கொண்டு  வந்து  விட்டால், பிறகு  நாம் சொல்வதைத்தான்  நம்  மனம்  கேட்கும். அதாவது  நம்  மனம்  நமக்கு  அடிமைப்பட்டுவிடும்.  இந்த  மிக உயர்ந்த  பயிற்சியைத்தான்  ரமளானின் 
நோன்பு  நமக்கு  அளிக்கிறது.



நீங்கள்  நோன்புற்றவராக  இருந்தால், உங்களுடைய  காதுகளும்,
கண்களும்  நோன்பிருக்க  வேண்டும்.  அதே  சமயம்  உள்ளத்தில்  நீ  அமைதியையும், நிம்மதியையும்  உணர  வேண்டும். நோன்பிருக்கிற  நாளும்,  மற்ற  நாட்களும்  ஒன்று  போல  இருக்கக்கூடாது. 



நோன்பாளிகள்  இவற்றைக்   கவனித்து,  ஆபாசமான  தொல்லைக்   காட்சிகள், சச்சரவுகளை  பரப்புகின்ற  சஹர்  நேர  சானல்கள்,அனைத்து  விதமான  வீணான  செயல்களை  விட்டும்  நீங்கி, அல்லாஹ்வின்  மீது  மட்டும்  பற்றும்,  பாசமும்  வைத்து  அல்லாஹ்வின்  நெருக்கத்தை   நோக்கி  மென்மேலும்  முன்னேறுகின்ற  நோன்பாளிகளாக  நாம்  அனைவரும்  திகழ்வோமாக !