02 December 2011

நாம் ஈமான் {நம்பிக்கை} கொள்வது ...


அஸ்ஸலாமு  அலைக்கும்  வரஹ்மதுல்லாஹி  வபர  காத்துஹு 


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
                                                                             

1......அல்லாஹ்வின்  மீது  நம்பிக்கை

2......வானவர்கள்  {மலக்குகள்}  மீது   நம்பிக்கை
          
3..... இறைவேதங்கள்   மீது   நம்பிக்கை                
         
4..... இறைதூதர்கள்    மீது  நம்பிக்கை 

5....  மறுமையின்  மீது  நம்பிக்கை 

6..... விதியின்  மீது  நம்பிக்கை 




1... அல்லாஹ்வை  நம்புவது....
                 
அல்லாஹ்  ஆதியிலிருந்து  தொடர்ந்து  இருந்து  வருகின்றான். விண்ணையும்,
மண்ணையும், அகிலங்கள்  அனைத்தையுமே  படைத்து,  தன்னந்தனியாக
நிர்வகிப்பவனாக  இருக்கின்றான். இவற்றைப்  படைபபதிலோ , நிர்வகிப்பதிலோ  அவனுக்குத்  துணையாக,  இணையாக  யாரும் இல்லை என 
உறுதி   கூறுதல் ;  அத்துடன்  அவன்   எவ்விதமான  மாசு  மருவுமற்றவன் ;
அவன்  தூய்மையானவன் ; இன்னும்  அவனே  எல்லாவித  நற்பண்புகளுக்கும்,
நிறைகுணங்களுக்கும்  உரிமையாளனாகவும்,  ஊற்றுக்கண்ணாகவும்  திகழ்கின்றான்  என்று  ஏற்றுக்  கொள்வதும்  ஆகும்.


   
2.....மலக்குகளை  நம்புவது....

மலக்குகள்  ஒளியால்  படைக்கப்பட்டவர்கள்.  இறைவனுக்கு  மாறு  செய்வதில்லை. எந்நேரமும்   அல்லாஹ்விற்கு   வணக்கம்   புரிவதிலும்  கீழ்ப்படிவதிலும்   ஈடுபட்டிருக்கின்றார்கள். வாய்மையான   பணியாளனைப் போன்று, அதிபதியின்  ஒவ்வொரு  கட்டளையும்  நிறைவேற்ற  அவன்  திருமுன்  கை  கட்டி  காத்து  நிற்கிறார்கள். உலகில்  நற்செய்தி  புரிபவர்களுக்காக  பிரார்த்தனை  செய்கின்றார்கள் என்று  உறுதியாக  நம்புவதாகும்.



3....இறைவேதத்தை   நம்புவது ...


தூயவனான  அல்லாஹ்   தன்   திருத்தூதர்கள்  வாயிலாக  அவ்வப்போது  இறக்கியருளிய  வழிகாட்டும்  வேதங்கள்  அனைத்தையும்  உண்மையானவை
என  ஏற்றுக்  கொள்வதாகும். அவற்றில்  இறுதியானது  திருக்குர்ஆன்  ஆகும். அல்லாஹ்  இந்த  வேதத்தை  அண்ணல்  நபி [ஸல்} அவர்களின்  வாயிலாக  அனுப்பினான். அது  தெளிவான  தூய  வேதமாகத்   திகழ்கிறது. அதில்  எந்தவித  குறைப்பாடும்  இல்லை. மேலும்  அது  எல்லாவிதக்  சீர்கேட்டை  விட்டும்  பாதுகாப்பாய்  உள்ளது. எனவே  இறைவனின்  பால்  கொண்டு  சென்று  சேர்க்கக்  கூடிய  வேதநூல்.  இதனைத்  தவிர  வேறு  எதுவும்  இப்போது  உலகில்  இல்லை.



4.  இறைத்தூதர்களை  நம்புவது .

இறைவன்  தரப்பிலிருந்து  வந்த   இறைத்தூதர்கள்  அனைவருமே  உண்மையாளர்கள்  ஆவர்.  அந்த  இறைத்தூதர்கள்  அனைவருமே இறைவனின்  செய்திகளை  கூடுதல்  குறைவு  ஏதுமின்றி  மக்களிடம்  சேர்த்தார்கள். இறுதியாக  அனுப்பப்பட்ட  இறைத்தூதர்  முஹம்மத் {ஸல்}
அவர்கள்.  இனி மனிதர்களின்  ஈடேற்றம்  அண்ணலாரின்  வழிமுறையைப்  பின்பற்றுவதிலேயே  அடங்கியிருக்கிறது.



5....  மறுமையின்  மீது  நம்பிக்கை.


அல்லாஹ்   அனைத்திற்குமே   ஒரு முடிவு  காலத்தை  நிர்ணயித்துள்ளான்.
இந்த  உலகத்திற்கும்  ஒரு  முடிவு  உண்டு.  இறந்துவிட்ட   அனைவரையும்  அதற்குப்பின்   அவர்களுடைய   அடக்கத்தலங்களை  விட்டு  எழுப்புவான். அப்போது  ஒவ்வொருவரிடமும்  அவர்கள்  இந்த  உலகில்  செய்த  செயல்களைப்   பற்றி  விசாரணை  செய்வான்.  அந்த  நாளில்  நன்மைக்கும், தீமைக்கும்  தகுந்த  கூலி  கொடுப்பான். ஒவ்வொருவருக்கும்  நீதி  வழங்குவான். இவ்வாறு  இறுதி நாளை  நம்பிக்கை  கொள்ள வேண்டும்.


6..... விதியின்  மீது  நம்பிக்கை...


உலகில்  நடந்து  கொண்டிருப்பவை  அனைத்தும்  இறைவனின்  கட்டளையினால்தான்  நடந்து  கொண்டிருக்கின்றன. இங்கு  அவனுடைய  கட்டளை  மட்டுமே  செயல்படுகிறது. அவன்  விரும்புவது  ஒன்று, உலகம்  செயல்படும்   விதம்  வேறொன்று  எனும்  நிலை  கிடையாது. ஒவ்வொரு  நன்மைக்கும், தீமைக்கும் , நேர்வழிக்கும், வழிகேட்டிற்கும்  நியதி  ஒன்று  உண்டு,  அதனை  அவன்  ஆதியிலேயே  நிர்ணயித்து  விட்டான். இறைவனுக்கு  நன்றி  செலுத்தும்  நல்லடியார்கள்  மீது வருகின்ற  துன்பங்கள்,அவர்கள்  அனுபவிக்கும்  இன்னல்கள், அவர்களுக்கு  நேரிடும்  சோதனைகள்- இவையனைத்தும்  அவர்களுடைய  இறைவனின்  கட்டளைப்படி  முன்பே  அவன்  நிர்ணயித்து  நியதிகள், விதிகளின்படிதான்  நேருகின்றன.



  உங்கள்  சகோதரி





10 November 2011

ஹஜ் 2011 - புகைப்படங்கள்


                                                                                          

அஸ்ஸலாமு  அலைக்கும்  வரஹ்மதுல்லாஹி  வபர  காத்துஹு                
      
                                                                          
        



















                                                                       
  நன்றி  Arab News பத்திரிகை

மெயிலில்  அனுப்பிவைத்த  மாமா  அஸ்ஹாப்  அவர்களுக்கும் ,
சகோதரர்  Mohamed M. Lafir  அவர்களுக்கும்  என் நன்றியை  தெரிவித்து  கொள்கிறேன்.



                                                                   
இஸ்லாத்தின் ஐந்தாம் கடமையை அல்லாஹ்வின் அருளால்  அவனில்லம் சென்று நிறைவேற்றிய ! அனைவருக்கும் !
அல்லாஹ் அவனின் பேரருளால் அவர்களின் ஹஜ்ஜை 
பரிபூரணமாக ! ஏற்றுக்கொள்ள வல்ல இறையோனிடமே 
இரு கரம் ஏந்தி இறைஞ்சுவோமாக ! 

ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ..

நம்  அனைவருக்கும்  இறைவன்  ஹஜ்  நிறைவேற்ற  கூடிய  பாக்கியத்தை  தந்தருள்வானாக ....ஆமீன் ...ஆமீன் ...ஆமீன் ...
 

09 October 2011

இஸ்லாத்தின் அறிவுரைகள் சில ....

                                                                                                                                                                                
அஸ்ஸலாமு  அலைக்கும்  வரஹ்மதுல்லாஹி  வபர  காத்துஹு 



அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…


நாம்  இஸ்லாத்தின்  அறிவுரைகளை  கடைபிடிக்கும்  போது ,இவ்வுலக  வாழ்வு கஷ்டத்திலிருந்து  நிம்மதியின்  பால், அழிவிலிருந்து  ஈடேற்றத்தின்  பாலும் 
மாறிவிடும்.  அது மட்டும் மல்ல  நம்  வாழ்க்கை ஒரு  புத்துணர்வாக  மாறுவதை  நாம் காணலாம்.



எப்போதும்   அர்த்தமின்றி   அதிகம்   பேசுவதை  தவிர்த்து   கொள்ளுங்கள்.


அல்லாஹ்  கூறுகிறான் 


தர்மத்தைப்   பற்றி  அல்லது  நன்மையானவற்றை   பற்றி  அல்லது   மனிதர்களுக்கிடையில்   சமாதானம்  ஏற்படுவதை  பற்றி  ஏவியதைதவிர  அவர்கள்  பேசும்  இரகசியங்களில்  பெரும்பாலானவற்றில்   யாதொரு  நன்மையுமில்லை. {அன்னிஸா  4:14}
                                             
    

நாம்  பேசுகின்ற  பேச்சுக்கள்   அனைத்தும்   நன்மையை  பெற்றுதரக்கூடியதாகவும்,  சுருக்கமானதாகவும்,  விளக்கமானதாகவும்,  கருத்தாழமிக்கதாகவும்  அமைந்திருப்பது   அவசியமாகும்.  ஏனெனில்  மலக்குகள்  எப்பொழுதும்  நாம்  பேசுகின்ற  பேச்சை  பதிவு  செய்து  கொண்டிருக்கின்றார்கள்.


ஒவ்வொருவரின்  வலது   புறத்திலும்,  இடது   புறத்திலும்  அமர்ந்து  {செயல்களை} எழுதும்   இரு  வானவர்கள்  மனிதர்களிடம்  இல்லாமல்  எந்த  சொல்லையும்   அவன்  மொழிவதில்லை {காவ்ப் :50: 17, 18}



குர்ஆன் ஓதப்பட்டால் அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாக) கேளுங்கள், மௌனமாக இருங்கள். (அதனால் நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள். (அல் அஃராப்:- 7 : 204)



நீங்கள் எதையாவது பேசினால் சிந்தித்து பேசுங்கள்! மேலும் நீங்கள் பேசக்கூடிய வார்த்தை நன்மையானதாகவும், அல்லாஹ்வுடைய கோபத்தின்பால் இட்டுச்செல்லக்கூடிய தீமையான விசயங்களிலிருந்து தூரமானதாகவும், இருப்பது அவசியமாகும். எனவே நாம் பேசக்கூடிய வார்த்தைக்கு மகத்தான நன்மை உள்ளது.


ஒரு வார்த்தை இறைதிருப்தியில் எவ்வளவு உயர்ந்த இடத்தை பெற்றுத்தரும் என்பதை அறியாமலேயே ஒரு அடியான் அவ்வார்த்தையை பேசுகின்றான். இவ்வார்த்தையின் காரணமாக அல்லாஹ் அவனது அந்தஸ்தை உயர்த்துகின்றான். மேலும் ஒரு வார்த்தையால் எந்தளவு அதிருப்தி ஏற்படும் என அறியாமலேயே பேசுகின்றான். அவ்வார்த்தையின் காரணமாக அவன் நரகத்தை அடைகின்றான். (புஹாரி)



நபி(ஸல்}  அவர்கள்  கூறுகிறார்கள் ...

இரு  தாடைகளுக்கு  மத்தியில்  உள்ள  தீங்கையும்,  இரு  கால்களுக்கு   மத்தியில்  உள்ள  தீங்கையும்  எவருக்கு  அல்லாஹ்  பாதுகாக்கின்றானோ 
அவர்  சுவர்க்கத்தில்   நுழைவார் {திர்மிதி}


அல்லாஹ்வின்   தூதரே !  ஈடேற்றம்  பெறுவது  எவ்வாறு   என்று  கேட்டேன். அதற்கு  நபிகளார்{ஸல்} கூறினார்கள்:  உன்  நாவை   தீங்கைவிட்டு   தடுத்துக்கொள் ! உன்  வீடு  விஸ்தீரமானதாக  இருக்கட்டும் ! உன்  பிழைகளுக்கு   அழுவீராக  எனக்  கூறினார்கள் (உக்பா பின்  ஆமிர்[ரலி}{திர்மிதி


உங்கள்   காதால்  கேட்கும்   அனைத்தையும்   பிறரிடம்   கூறிவிடாதீர்கள். அது 
சில  வேலை  பொய்யாகவும்  இருக்கலாம். பிறர்  கண்களுக்கு  தாங்கள்   உயர்ந்த  நிலையில்   இருப்பதாக  எண்ணி  பெருமை  படாதீர்கள். பேசத்  தொடங்கினால்   கர்வமாக  பெருமையாக  பேசுவதை  தவிர்த்து  கொள்ளுங்கள்.


தான்  கேட்டது   அனைத்தையும்    அப்படியே   பேசுபவன்  ஒருவன்  பொய்யன் 
என்பதற்கு  போதுமான  ஆதாரமாகும்[முஸ்லீம்]


உங்களில்அழகிய குணமுள்ளவர்கள் எனக்கு மிக நேசமானவர்களிலும், மறுமைநாளில் எனக்கு மிக நெருக்கமாக அமர்ந்திருப்பவர்களிலும் அடங்குவர். உங்களில் எனக்கு மிக வெறுப்பானவர்களும், மறுமைநாளில் என்னை விட்டும் தூரத்திலிருப்பவர்களும் உங்களில் அதிகமாக பேசுபவர்களும் தங்களின் பேச்சால் மக்களிடம் பெருமையடிப்பவர்களும், வாய்பிளந்திருப்பவர்களும் ஆவார்கள். 





அல்லாஹ்வின் தூதரே! வாய் பிளந்தோர் என்றால் யார்? என்று நபித்தோழர்கள் கேட்ட போது பெருமையடிப்பவர்கள் என நபிகளார் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அஹ்மத், திர்மிதி)



எவர் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் விசுவாசிக்கின்றாரோ அவர் நல்லதை பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்.(புஹாரி, முஸ்லிம், திர்மிதி)

நீங்கள் எவரிடமாவது பேசும்போது அவர்களின் பேச்சை அசட்டை செய்யாது இடையில் துண்டிக்காது, மறுப்புத் தெரிவிக்காது நல்லமுறையில் கேட்டு அதற்கு தெளிவாக ஒழுங்கான முறையில் அழகிய பதிலை கூறுங்கள். அதுவே உங்களுக்கு அழகிய பண்பாகும்.


உங்களில் சிறந்தவர் உங்களில் அழகிய குணமுடையவர்  (புஹாரி)
 


தனது சகோதரனை சிரித்த முகத்துடன் பார்ப்பது உட்பட எந்த ஒரு நல்ல விஷயத்தையும் இலகுவாக, இழிவாக கருதிவிடாதே! (முஸ்லிம்)


எவர் தனது உணவில் அபிவிருத்தியும், தனது வாழ்நாள் நீடிக்கவேண்டுமெனவும் விரும்புகின்றாரோ அவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து நடக்கவும். (ஆதாரம்:- புஹாரி, முஸ்லிம்)
உறவினர்களை தரிசிப்பது, வயதிலும், உணவிலும் பரகத்தை ஏற்படுத்தும்.


அல்லாஹ்வின் அருள்மறையாம் அல்குர்ஆன் ஓதுவதை கேட்டால் அனைத்து பேச்சுக்களையும் விட்டுவிட்டு அதற்கு செவிசாய்க்கவும். ஏனெனில் இதுவே அவனது பேச்சிற்கு மதிப்பளித்து அவனது கட்டளைக்கு கீழ்படிவதாகும்.


பர்ளு, ஸுன்னத்கள் மற்றும் அல்லாஹ்வை நெருங்கக்கூடிய நல்லமல்களை செய்வதன் மூலம் அல்லாஹ்வை நெருங்கி மாபெரும் கூலியை பெற்றுக்கொள்வது மட்டுமல்லாது உயர்ந்த அந்தஸ்த்துக்களை அடைந்துகொள்வதுடன் எவ்வித அச்சமோ கவலையோ இல்லாத அல்லாஹ்வின் நேசர்களில் ஒருவராக நீயும் இருப்பாய்! மேலும் அல்லாஹ் அவர்களின் பிரார்த்தனைக்கு விடையளிக்கின்றான். அவர்களின் கவலைகளை நீக்கி அவர்களின் உள்ளங்களை அமைதியால் நிரப்புகின்றான்.



நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

அறிஞர்களிடம் தர்க்கம் செய்வதற்காகவோ, மடையர்களிடம் பெருமை அடிப்பதற்காகவோ, மக்களின் கவனத்தை தன்பக்கம் திருப்புவதற்காகவோ யாரேனும் கல்வி கற்றால் அவரை அல்லாஹ் நரகில் நுழைவிப்பான். (திர்மிதி)


உங்களது நாவு அல்லாஹ் உனக்களித்த மாபெரும் அருட்கொடையாகும். நன்மையை ஏவி, தீமையை தடுத்தல், நன்மையின்பால் மக்களை அழைத்தல் போன்ற நல்ல விஷயங்களுக்காக அதனை பயன்படுத்திக்கொள்!



ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரனவான். எனவே ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு அநீதி இழைக்கமாட்டான். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை கைவிடமாட்டான். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிடம் பொய்யுரைக்க மாட்டான். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை தாழ்த்திட மாட்டான். இறையச்சம் இங்கே உள்ளது என்று நபிகளார் (ஸல்) அவர்கள் மூன்றுமுறை தங்கள் நெஞ்சை தொட்டுக்காட்டினார்கள்.



ஒரு முஸ்லிம் தன்னுடைய சகோதர முஸ்லிமை இழிவாக கருதுவது தீய செயலாகும். ஒரு முஸ்லிமின்மீது ஒரு சகோதர முஸ்லிமின் இரத்தமும், உடைமையும், கண்ணியமும் ஹராமாக்கப்பட்டுள்ளது. (அவற்றிற்கு ஊறு விழைவிக்கக்கூடிய எந்தச் செயலும் விலக்கப்பட்டதாகும். (முஸ்லிம்)  


                                     
  
  உங்கள்  சகோதரி





03 October 2011

இறை நேசர்களிடம் உதவி தேடுதல் குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு.பகுதி -3

                                                                           
அஸ்ஸலாமு   அலைக்கும்   வ  ரஹ்மதுல்லாஹி  வபர  காத்துஹு...


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…



 அவ்லியாக்களின் பொருட்டால் தேவைகளைக் கேட்குதல்:-
மார்க்கத்தில் ஓரளவுக்கு விபரமுள்ள இன்னும் சிலர் அவ்லியாக்களிடம் நேரடியாகக் கேட்டுப் பெறுவதுதான் பாவம். ஆனால் நாங்கள் அவ்லியாக்களிடம் நேரடியாகப் பிரார்த்திக்கவில்லை, மாறாக இறைவனிடமே அந்த அவ்லியாக்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றி தருமாறு வேண்டுகிறோம் என்கின்றனர். நல்ல மனிதராக வாழ்ந்து மறைந்த குறிப்பிட்ட ஒருவருடைய பொருட்டால் தம் தேவைகளை நிறைவேற்றித்தருமாறு இறைவனிடம் வேண்டும் ஒருவர் பின்வரும் குற்றங்களைச் செய்தவா போலாகிறார்.


மரணித்த ஒருவரைப் பார்த்து இவர் சுவர்க்கவாதி என கூறுவது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமான மரணித்தவர் இறைவனின் திருப்தியை பெற்று மரணித்தாரா அல்லது இறைவனின் அதிருப்தியைப் பெற்று மரணித்தாரா என்ற இரகசியத்தை அறிந்தவர் போலாகிறார்.


ஒருவர் மரணமடையும் போது அவர் முஸ்லீமாக மரணித்தாரா அல்லது முஸ்லிமல்லாதவராக மரணித்தாரா என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் அறிந்துகொள்ள முடியாது. நபி (ஸல்) அவர்களின் உம்மத்துகளில் சுவர்க்கவாதி என்று நபி (ஸல்) அவர்களால் கூறுப்பட்டவர்கள் அஸ்ரத்துல் முபஸ்ஸரா என்று சொல்லப்படக் கூடிய பத்து நபித்தோழர்கள் ஆவர். இவாகளைத் தவிர மற்றெவரையும் அவர் சுவர்க்கவாதி என்றோ அல்லது நரகவாதி என்றோ கூறக்கூடாது என்று நபி (ஸல்) அவர்களின் கட்டளையிருக்க ஒருவரைப்பார்த்து இவர் இறைவனுக்கு நெருக்கமானவர், அவர் பொருட்டால் இறைவனிடம் பிரார்த்தித்தால் இறைவனால் மறுக்கமுடியாது என்று கூறுவது ஏராளமான குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிராவைகளாகும். இங்கே ஓரு சிறிய உதாரணத்தைக் கூற விரும்புகிறேன். உஹது போரின் போது காயம்பட்ட நபி (ஸல்) அவர்கள், தம்முடைய நபியைக் காயப்படுத்திய சமூகம் எப்படி வெற்றியடையும்? என்று கூறினார்கள். அப்போது இறைவன் பின்வரும் திருமறையின் வசனத்தை இறக்கினான்.


 
(நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை. அவன் அவர்களை மன்னித்து விடலாம்; அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம் – நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின் காரணமாக. (அல்குர்ஆன் 3:128)

சகோதர, சகோதரிகளே சற்று சிந்தியுங்கள். உலகத்தார்களுக்கெல்லாம் நேர்வழிகாட்டுவதற்காக அனுப்பப்பட்ட உத்தம திருநபி (ஸல்) அவர்களுக்கே அதுவும் அவர்களைக் காயப்படுத்தியவர்களைப் பார்த்து கூறியதற்கே அவ்வாறு கூறுவதற்கு எத்தகைய அதிகாரமும் இல்லை என இறைவன் கூறியிருக்கும் போது நமக்கு ஒருவரைப் பார்த்து இவர் சுவர்க்கவாதி என்றும் மேலும் அவர் இறைவனுக்கு நெருக்கமானவர் என்றும் எப்படி கூற முடியும்?
முஸ்லிம்களாக வாழ்ந்து வழிதவறிய எத்தனையோ கூட்டத்தார்களைப் பற்றி திருமறையின் வாயிலாகவும், ஹதீஸ்கள் மூலமாகவும் படித்திருக்கிறோம். முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அதிலிருந்து வழிதவறிவிடாமல் இருக்கவும், மேலும் முஸ்லிம்களாகவே மரணிப்பதற்கும் இறைவனிடம் பிராத்திக்க திருமறையின் வசனங்கள் நமக்கு வலியுறுத்துகிறது.


‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!’ (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) (அல்குர்ஆன் 3:8)

மரணித்த ஒருவரின் பொருட்டால் தேவையைக் கேட்பது இறைவனுக்கு அவரிடம் ஏதோ தேவையிருப்பது போல கருவதாகும்.
மேலும் நல்லடியார்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றுவாயாக என்று இறைவனிடம் கேட்டால் அந்த நல்லடியாரிடம் இறைவனுக்குத் ஏதோ தேவையிருப்பது போலவும், அதனால் அவன் வேறுவழியில்லாமல் தரவேண்டியதிருக்கிறது என்றும் பொருளாகாதா? இது அல்லாஹ் யாரிடத்திலும் எந்த தேவையுமற்றவன் என்ற திருமறையின் வசனங்களுக்கு (அல் குர்ஆன் 35:15 மற்றும் 112:2) முரனாக உள்ளதே!

மரணித்த ஒருவரின் பொருட்டால் தேவையைக் கேட்பது கியாமத் நாளின்அதிபதியாகிய தீப்புக் கூறும் இறைவனின் இடத்தில் அமர்வதற்குச் சமமாகும்

மேலும் யாருடைய பொருட்டால் கேட்கின்றோமோ அவர்கள் மரணிக்கும் தருவாயில் இறைவனின் உவப்பை, திருப்தியைப் பெற்றவர்களாக மரணித்தவர்களா அல்லது இறைவனின் வெறுப்பை பெற்றவர்களாக மரணித்தார்களா? என்பது நமக்கு திட்டவட்டமாக எப்படி தெரியும்? யார் நேர்வழி பெற்றவர்கள், யார் வழிதவறியவர்கள் என்று கியாமத் நாளில் அல்லவா நமக்குத் தெரியும்? அதை இங்கேயே நாம் தீமானிப்பது கியாம நாளின் நீதிபதியாகிய அல்லாஹ்வின் இடத்தில் அமர்வதற்குச் சமமாகாதா? நவூபில்லாஹி மின்ஹா. யாருடைய பொருட்டால் நாம் கேட்கின்றோமோ அவர் இறைவனின் திருப்தியைப் பெற்றிருக்காமல் மாறாக கோபத்தைப் பெற்றவராகயிருந்தால் அவ்வாறு துஆ கேட்ட நம்கதி என்னவாகும்? ஏனென்றால் இறந்த அந்த அடியார் இறைவனின் திருப்தியைப் பெற்று அவனுக்கு மிக நெருக்கமாகி விட்டார் என்பதை திட்டவட்டமாக யாராலும் கூற முடியாது. அவ்வாறு கூறமுடியும் என்று யாராவது கூறினால், இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமான, எவர்கள் நல்லடியார்கள், எவர்கள் பாவிகள் என்ற இரகசியத்தை அவர்களும் அறிந்திருப்பதாகக் கூறி இறைவனின் வல்லமையில் பங்குகேட்டு அவனுடைய இடத்தில் அமர்வதற்குச் சமமாகும். இவ்வாறு எண்ணம் கொள்வது இணை வைத்தல் என்னும் இறைவனால் மன்னிக்கப்பட முடியாத மாபெரும் குற்றமாகாதா? அல்லாஹ் நம்மனைவரையும் இவ்வாறு எண்ணம் கொள்வதிலிருந்து காப்பாற்றுவானாகவும்.

அல்லாஹ் கூறுகிறான்:-
“நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்” (அல்குர்ஆன் 2:22)
மேலும், நமக்கு உறுதியாக திட்டவட்டமாகத் தெரியாத எந்த விஷயங்களையும் பின்பற்ற வேண்டாம் என்று அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகிறான்.

“எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.” (அல் குர்ஆன் 17:36)

சரி, அப்படியானால் நீங்கள் அவ்லியாக்களே, இறை நேசர்களே இல்லையென்று கூறுகிறீர்களா என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். இறைவனின் நேசர்களின் இலக்கணங்களைப் பற்றி அல்லாஹ்வே தன் திருமறையில் பல இடங்களில் கூறுகிறான். நாம் மேற்கூறப்பட்ட குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் மூலம் கூறுவது என்ன வென்றால்: -
  •  இறந்தவர்களால் கேட்கவும், பரிந்து பேசவும்முடியாது.
  • அவர்களிடம் கேட்பது அல்லது அவர்களின் பொருட்டால் கேட்பது கூடாது.
  • நமது எல்லாத்தேவைகளையும் அல்லாஹ்விடமே கேட்டுப் பெறுதல் வேண்டும்.
இறைவன் கூறுகிறான்:
‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.’  (அல்குர்ஆன் 40:60)

எனவே யாருடைய பொருட்டால் நாம் இறைவனிடம் கேட்கின்றோமோ அவர் இறைவனின் உவப்பைப் பெற்றவரா அல்லது இல்லையா என்பது நமக்குத் திட்டவட்டமாகத் தொயாததாலும், மேலும் இவ்விசயம் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயமாவதாலும் நாம் அவ்வாறு கேட்பதிலிருந்து தவிர்ந்துக் கொண்டு, திருமறையில் அல்லாஹ் கூறியிருப்பது போல் அவனிடமே எல்லாத் தேவைகளையும் கேட்டு, அவனையே சாந்திருப்போமாக.

முன்னோகள் செய்தது மார்க்கமாகி விடாது:-
ஒரு சிலருக்குத் தெளிவு ஏற்பட்டாலும் அவரை ஷைத்தான் இவ்வாறு குழப்புவான் தலைமுறை தலைமுறையாக நமது முன்னோர்களும், தாய் தந்தையரும் நல்லடியார்களிடம் பிராத்தித்து வந்திருக்கிறார்களே, அவர்கள் செய்தவை அத்தனையும் தவறானவையா? அவர்கள் எல்லோரும் பாவிகளா? அவர்கள் எல்லோரும் நரகத்திற்குத் தான் செல்வார்களா? இவாகள் என்ன புதுக்குழப்பத்தை உண்டு பண்ணுகிறார்கள்? என்று ஷைத்தான் சிலரின் இதயத்தில் முன்னோர்கள் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தி, அவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீதுகள் கூறியவற்றை உதாசீனப்படுத்திவிட்டு, அவர்களின் முன்னோர்களுடைய பாதையை பின்பற்றுமாறு செய்துவிடுகின்றான். முன்னோர்கள் செய்தது எல்லாம் மார்க்கமாகி விடாது. குர்ஆன், ஹதீது கூறுவதே மார்க்கமாகும். இவ்வாறு முன்னோர்கள் செய்தார்களே, நாமும் செய்தால் என்ன தவறு என்று கேட்பவர்களுக்கு அல்லாஹ்வே தன்னுடைய திருமறையில் பதிலளிக்கின்றான்:


“மேலும், ‘அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்’ என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ‘அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’ என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?” (அல் குர்ஆன் 2:170)


இந்த வசனமும் இன்னும் எராளமான வசனங்கள், பார்க்கவும் 7:27-30, 31:21, 37:69-70, 43:22-24, 10:78, 21:53, 37:69, 21:52-54, 11:87, 14:10, 11:109, 5:104, 7:28 போன்ற யாவும் நாம் நமது முதாதையர்களையோ, தாய் தந்தையரையோ பின்பற்றக் கூடாது என்றும் அல்லாஹ்வின் திருமறையையும், அவனுடைய தூதரின் வழிகாட்டுதலையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. எனவே எங்களின் முன்னோர்கள் நல்லடியார்களிடம் பிரார்த்தித்தாகள், அதனால் நாங்களும் அவர்களிடம் பிரார்த்திக்கின்றோம் என்று எவரேனும் கூறினால் அது நிச்சயமாக வழிகேடேயாகும். ஏனென்றால் அவர்கள் சென்று போன சமுதாயம். அவர்கள் செய்தது பற்றி நீங்கள் வினவப்படமாட்டீகள் என்பது அல்லாஹ்வின் கூற்றாகும். (அல் குர்ஆன் 2:134)


ஆலிம்கள் செய்வதெல்லாம் ஆகுமானதாகிவிடுமா?
இன்னும் சிலர் இதைப்பற்றி எந்த ஒரு ஆலிமும் ஒன்றும் கூறியதில்லையே, நீங்கள் தானே புதிதாக கூறுகிறீகள்! அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது? என்று கேட்கின்றனா. இஸ்லாத்தின் அடிப்படையை நன்கு கற்றறிந்த அறிஞர்-ஆலிம் எவரும் இத்தீமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருந்ததில்லை. இறைவனுக்கு இணைவைக்கும் மாபாதக செயலாகிய நல்லடியார்களிடம் கையேந்துவதை ஆரம்பக்கால முதற்கொண்டே இறைவனுக்கு பயந்த மார்க்க அறிஞர்கள் வண்மையாகக் கண்டித்து வருகின்றார்கள். இன்றளவும் கண்டித்தும் வருகின்றார்கள்.



இஸ்லாத்தின் மற்ற சில அம்சங்களில் வேண்டுமானால் ஆலிம்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருக்கலாமே தவிர ஈமானுக்கு வேட்டு வைக்கும் கப்ரு வணக்கத்தைப் பற்றிய தெளிவுகளில் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை நன்கு கற்றுணர்ந்த அறிஞாகளிடம் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவர்கள் ஒருமித்த குரலாக இத்தீயச் செயல்களை எதிர்க்கவே செய்கின்றனர். ஆனால் கப்ரு வணக்கமுறைகளை ஆதரிப்போன் கைகளில் அதிகாரமும், பொருளாதாரமும் இருப்பதால் அவர்கள், அந்த கப்ரு வணக்க முறைகளுக்கு எதிரான ஆலிம்களின் குரல்கள் மக்களைச் சென்றடையாமல் தடுக்கின்றனர்.


ஆனால் ஆலிம்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் ஒரு சில சொற்பமானவர்களே, அதிகாரமும், பொருளாதாரமும் மிகுந்த கப்ரு வணங்கிகளிடமிருந்து அற்ப உலக ஆதாயம் பெறும் பொருட்டு, நல்லடியார்களிடம் நேரடியாகக் கேட்டுப்பெறுவதில் எந்தத்தவறும் இல்லை என்று கூறி, நல்லடியார்களின் கப்ருகளில் நடைபெறும் மாக்கத்திற்கு விரோதமான கூடு, கொடியேத்தம், சந்தனம் பூசுதல், மேளதாளம் போன்ற அனாச்சாரங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். மேலும் இவர்களே முஸ்லிம்களிடையே புரையோடிப்போய் இருக்கும் இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து வகையான பித்அத்தான காரியங்களுக்கும், மூடப்பழக்க வழக்கங்களுக்கும் ஆதரவு தெரிவித்து தங்களின் வயிற்றைக் கழுவிக் கொள்கின்றனர். இவர்களைக் குறித்து அல்லாஹ் தன் திருமறையிலே கடுமையாக எச்சரிக்கின்றான்.


“நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.” (அல்குர்ஆன் 2:42)
“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.” (அல் குர்ஆன் 2:159)


மார்க்கத்தின் மீது பொய்யை ஏற்றிச் சொல்வது தீமைகளில் மிக மோசமானதும், பொய்யின் வகைகளில் மிக கொடியதும் ஆகும். அதற்கு கூலி நரகமே’ என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அறிவிப்பவர் : ஆபூஹுரைரா ரலி, ஆதார நூல்: புகாரி


எனவே சமுதாய மக்களுக்கு மார்க்க அறிவைப் புகட்டி சமுதாயத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பிலுள்ள சமுதாயத்தின் கண்களான உலமாப்பெருமக்கள் அல்லாஹ்வும், ரஸுலும் நமக்குக் காட்டித்தந்த உண்மையான இஸ்லாத்தை எதற்கும், எவருக்கும் பயப்படாமல் துணிந்துக்கூறி, நாளை மறுமையில் அல்லாஹ் அளிக்கவிருக்கும் அளப்பரிய செல்வங்களைப் பெற்றிட வேண்டுகிறோம். அல்லாஹ் அவர்களுக்கு இத்தகைய ஆற்றலைத்தந்து மார்க்கச் சேவை செய்வதன் மூலம் ஈருலகிலும் நற்பேருகளை பெற வல்ல இறைவனிடம் பிராத்திப்போம்.



எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறும் முழுமையான ஈமானைத் தந்து, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் கையேந்தி நிற்காமல் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக. ஆமீன்
                                                                                     
                                                                                       முற்றும்.   
                                                                                                     
நன்றி: சுவனத்தென்றல்.காம்
                                                                                                      

                              
        

28 September 2011

இறை நேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு.பகுதி -2






அஸ்ஸலாமு   அலைக்கும்   வ  ரஹ்மதுல்லாஹி  வபர  காத்துஹு...


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…



இறந்தவர்களுக்கும் இவ்வுலகத்தினருக்குமிடையில் ஒரு திரையிருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்:-

“அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் – சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன” (அல் குர்ஆன் 39:42)
“அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது” (அல் குர்ஆன் 23:99-100)


இறந்த நல்லடியார்களால் நம் தேவைகளைக் கேட்க முடியாது என்று அல்லாஹ் கூறுகின்றான்:-
“நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது; – அவ்வாறே செவிடர்களையும் – அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும்போது – (உம்) அழைப்பைக் கேட்கும் படிச் செய்ய முடியாது” (அல் குர்ஆன் 27:80)
“குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள். (அவ்வாறே) இருளும் ஒளியும் (சமமாகா). (அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா). அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், கப்ருகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.” (அல்குர்ஆன் 35:19-22)

இந்த வசனத்தில், ‘உயிருள்ளவர்களும் இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ என்று கூறிய இறைவன், உயிருள்ளவாகளில் தாம் நாடியவாகளைச் செவியுறச்செய்து நேர்வழிப்படுத்துவதாகக் கூறுகின்றான். மேலும் ‘கப்ருகளில் உள்ள இறந்தவர்ளளைச் செவியுற செய்பராக நீ இல்லை’ என்று இறைவன் கூறுவதன் மூலம் இறந்தவர்களால் செவியேற்க முடியாது என்று திட்டவட்டமாக அல்லாஹ் கூறிவிட்டான். மேலும் அவன் கூறுகையில்,

“நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.” (அல்குர்ஆன் 35:14)
“நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான் அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்” (அல்குர்ஆன் 7:196-197)


“நல்லடியார்களைப் பாதுகாவலாகளாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அல்லாஹ் கூறுகின்றான்-
“நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம் ) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.” (அல்குர்ஆன் 18:102)


நல்லடியார்களால் பரிந்து பேசமுடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்:-
“அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! ‘அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?’ (என்று.)” (அல்குர்ஆன் 39:43)


நல்லடியார்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள், அவர்களால் நம் அழைப்பைச் செவியுற முடியாது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
உங்களில் யாரேனும் மரணித்து விட்டால் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவாக்கத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். கியாமத்து நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இதுதான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும் (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
நல்ல மனிதராக இருந்தால், நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டு வருகிறேன் என்று அந்த நல்ல மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள், இந்த இடத்திலிருத்து உன்னை இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக என்று கூறுவார்கள்.. தீய மனிதராக இருந்தால் அவனது இடத்திலிருந்து இறைவன் அவனை எழுப்பும் வரை வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் (ஆதாரம்: திர்மிதி ஹதீஸ் சுருக்கம்)


என் குடும்பத்தாரிடம் போய் நல்லுபதேசம் செய்துவிட்டு வருகிறேன் என்று அந்த நல்லவர் வானவர்களிடம் அனுமதி கேட்கும் போது அனுமதி மறுக்கப்படுகிறது. அப்படியிருக்க அந்த ஆத்மா பர்ஸக் உலகிலிருந்து இவ்வுலகிற்கு வர வானவர்கள் அனுமதிப்பார்களா? நிச்சயமாக மாட்டார்கள். எனவே அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் மரணித்த நல்லடியார்களின் ஆத்மா இருக்கும் போது, நல்லடியார்கள் அவர்களுடைய கப்ர்களில் இருந்துக் கொண்டே வெளியில் உயிருடன் இருப்பவர்கள் தம் மனதிற்குள் கேட்கும் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றித் தருகிறார்கள், அல்லது அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுகின்றார்கள் என்று நம்புகின்றவர்கள் மேற்கண்ட ஹதீஸை நிராகரித்தவர் போல் ஆகமாட்டாரா?


நல்லடியார்கள் அல்லாஹ்விடம் சிபாசு செய்வார்கள் என கூறுபவர்களுக்கு அல்லாஹ் கூறுகின்றான்:-
“அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ‘அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை’ (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.’ (அல் குர்ஆன் 39:3)


இங்கே சிலர் கூறலாம், நாங்கள் அவர்களை வணங்கவில்லையே, அந்த நல்லடியார்களிடம் இறைவனிடம் எங்களின் கோரிக்கைகளைப் பெற்றுத்தாருங்கள் என்று தானே பிராத்திக்கிறோம் இந்த வசனம் எப்படி எங்களுக்குப் பொருந்தும்? என்று கேட்கலாம். நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனையும் ஒரு வணக்கமாகும் என்று கூறியிருக்கிறார்கள். அல்லாஹ்வும் தன்னுடைய திருமறையிலே பல்வேறு இடங்களில் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்று கூறுவதன் மூலம் பிரார்த்தனையும் ஒரு வணக்கம் என்றே கூறுகின்றான்.
இது போன்ற இன்னும் ஏராளமான வசனங்களில் (பார்க்க : 17:56-57, 34:22, 10:106, 6:71, 7:191, 7:192, 10:107, 27:62) இருந்து நாம் விளங்குவது என்னவென்றால்,

  • இறந்தவர்களால் பிரார்த்தனை செய்யமுடியாது (16:20-21) 
  •  இறந்தவர்களால் சிபாசு, பரிந்துரை செய்யமுடியாது (39:3, 10:18)
  • இறந்தவர்கள் எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பது கூட அவர்களுக்குத் தொயாது (16:20-21)
  • இறந்தவர்களின் உயிரை அல்லாஹ் தன்னிடத்திலே நிறுத்திக் கொள்கின்றான். (39:42)
  • இறந்தவர்களுக்கும் இவ்வுலகத்தில் உள்ளவர்களுக்கும் பர்ஸக் என்னும் திரையிருக்கிறது (23:99-100)
  • அல்லாஹ்வையன்றி யாரை பிரார்த்திக்கின்றோமோ அவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவி செய்துகொள்ள சக்தி பெறமாட்டார்கள். (7:196-197)
  • அவர்கள் உங்கள் பிரார்த்தனையைச் செவியேற்கமாட்டார்கள் (35:13-15)
  • இறந்த நல்லடியார்களால் பதிலளிக்க முடியாது (17:56-57)
  • அவர்களுக்கு அணுஅளவு அதிகாரமும் இல்லை (35:13-15)
  • அல்லாஹ்வின் அடியார்களை பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளக் கூடாது (18:102)
  • அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே (7:194)
  • அல்லாஹ் அல்லர்தவர்களை அழைக்கக்கூடாது (10:106, 6:71, 23:117)
  • அல்லாஹ்வின் இல்லங்களில் நல்லடியார்களை அழைக்கக்கூடாது (72:18) 
எனவே என்றோ இறந்துவிட்ட நல்லடியார்கள் பிராத்தித்தால் அது இறைவனால் அங்கீகரிக்கப்படும் என்று ஒருவர் நம்பி அந்த நல்லடியார்களின் கப்ரில் கையேந்தி நின்றால் நிச்சயமாக அவர் மேற்கூறுப்பட்ட வசனங்களை நிராகரித்ததோடல்லாமல் இறைவனுக்கு இணை வைத்த மகா பாவியாகிவிடுவார். அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்றுவானாக.


ஷுஹதாக்கள் என்றும் உயிர் வாழும் தியாகிகளாயிற்றே!!!
இன்னும் சிலர் இந்த வசனங்கள் எல்லாம் சாதாரண மனிதாகளைக் குறிக்கின்றது. ஆனால் அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த ஷுஹதாக்கள் உயிரோடு இருப்பதாக குர்ஆன் கூறுகிறதே! ஆப்படியானால் குர்ஆன் கூறும் அந்த வசனத்தின் பொருள் என்ன என்று கேட்கின்றனர்.
அல்லாஹ் கூறுகின்றான்.


“அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை அவர்கள் மரணித்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள் அப்படியல்ல அவர்கள் உயிருள்ளவர்கள் எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்’ (அல்-குர்ஆன்: 2:154)
‘அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் – தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் – (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.” (அல்குர்ஆன் 3:169)


இந்த வசனத்திற்கு விளக்கமாக அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் ஸஹீஹ் முஸ்லிமில் பின்வரும் ஹதீஸை அறிவிக்கின்றாகள்.
மஸ்ருக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: -: இவ்வசனம் குறித்து அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் வினவினோம்: அதற்கு அவர்கள் கூறினாகள்: அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றி நாங்கள் கேட்டோம்: அப்போது அண்ணலார் பின் வருமாறு விளக்கினார்கள்:
‘அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் உடலுக்குள் இருக்கும். அவைகள் அர்ஷில் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூடுகளுக்குள் இருக்கும். சுவர்க்த்தில் அவை நினைத்தபடி சுற்றித்திரிந்து விட்டு அந்த கூட்டுக்குள் வந்து சேரும். அவற்றைப் பார்த்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்கள் இறைவன் கேட்பான். இனி எங்களுக்கு என்ன தேவையிருக்கிறது? நாங்களோ சுவர்க்கத்தில் விரும்பிய இடங்களிலெல்லாம் கனிவகைகளை உண்டு வருகிறோம் என்று அவர்கள் கூறுவர். இவ்வாறு இறைவன் மூன்று முறை அவர்களிடம் கேட்பான். தாங்கள் ஏதாவது ஒன்றை இறைவனிடம் கேட்காமல் விடப்படமாட்டோம் என்பதை உணர்ந்துக் கொள்ளும் அவர்கள், இறைவா எங்கள் உயிர்கள் எங்கள் உடல்களில் மீட்கப்பட வேண்டும்: மீண்டும் ஒரு முறை உன்னுடைய பாதையில் நாங்கள் உயிர் நீக்க வேண்டும் என்று கூறுவர். அவர்களுக்கு வேறு எந்த தேவையும் கிடையாது என்பதை காணும் இறைவன் அவர்களை (வேறொன்றும் கேட்காமல்) விட்டுவிடுவான்’ முஸ்லிம் ஹதீஸ் எண் 4651


இதுதான அந்த ஆயத்தின் விளக்கம். ஆனால் நம்மில் சிலர், ஷஹீதுகள் கப்ரின் உள்ளே உயிரோடு இருக்கிறார்கள்: அவர்களிடம் நம் தேவைகளை கேட்டால் அவர்கள் அதை செவியுற்று, அத்தேவைகளை நிறைவேற்றி வைக்கிறார்கள் என்று தவறாக எண்ணி, கூட்டம் கூட்டமாக கப்ருகளை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மேற்கண்ட ஹதீஸை படித்து சிந்தித்து தெளிவு பெற வேண்டுகிறோம்.

                                                                                    இறைவன்  நாடினால்
                                                                                                    
                                                                                            தொடரும் .....
                                                                                       
    உங்கள்  சகோதரி                                                          

19 September 2011

1.இறை நேசர்களிடம் உதவி தேடுதல் –குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு... .பகுதி 1.



                                                                             


                                                                          
அஸ்ஸலாமு   அலைக்கும்   வ  ரஹ்மதுல்லாஹி  வபர  காத்துஹு...


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…


அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று சாட்சி கூறகிறேன்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாராகவும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன்.

 
பொதுவாக இறைவனோடு மற்றவர்களையும் அதாவது பெரியார்களையும், ஷெய்ஹு மார்களையும், பீர்களையும், அவ்லியாக்களையும், இறைநேசர்களையும் பிராத்திப்பவர்கள் பின்வரும் காரணங்களில் சிலவற்றையோ அல்லது இவற்றில் ஏதேனும் ஒரு காரணத்தையோ கூறுவர். அவைகள் யாவை எனில்,
 
  1. நீதிபதியிடம் வாதாடுவதற்காக ஒரு வக்கீல் தேவையல்லவா? அதுபோல் நாங்கள் அவ்லியாக்களிடம் அல்லாஹ்விடம் வாதாடுவதற்காக முறையிடுகிறோம் நாங்கள் கேட்பெதல்லாம் கிடைக்கிறது. அதனால் தான் தொடர்ந்து கேட்கிறோம்
  2. நாங்கள் பாவங்கள் செய்த பாவிகளாக இருக்கின்றோம். அதனால் பாவமே செய்யாத இறைவனுக்கு நெருக்கமான நல்லடியார்கள் அல்லாஹ்விடம் எங்களின் தேவைகளைக் கேட்டுப் பெற்றுத் தருவார்கள்
  3. நல்லடியார்கள் கேட்கும் துஆ இறைவனால் மறுக்கப்படமாட்டாது. அதனால் அவர்கள் மூலம் இறைவனிடம் கேட்கிறோம்
  4. மார்க்கத்தில் சிறிதளவு விபரமுள்ள இன்னும் சிலர் நாங்கள் அவ்லியாக்களிடம் நேரடியாகப் பிரார்த்திக்கவில்லை, மாறாக இறைவனிடமே அந்த அவ்லியாக்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகிறோம்
  5. நாங்கள் ஒன்றும் புதிதாக இதைச் செய்யவில்லை. எங்கள் முன்னோர்களும், மூதாதையர்களும் அவ்லியாக்களிடம் முறையிட்டுத் தானே தேவைகளைப் பெற்றுவந்தர்கள். அவர்கள் என்ன ஒன்றும் விளங்காதவர்களா?
  6. எங்கள் ஆலிம்களும் மற்றும் ஹஜ்ரத் மார்களும் இதைச் செய்கிறார்களே, அவர்களும் தவறு செய்கிறார்களா?  
அல்லாஹ் தன்திருமறையில் அல்லாஹ் ஒருவனையே வணங்கவேண்டும் என்றும், அவன் ஒருவனிடமே உதவிதேட வேண்டும் என்றும் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியிருக்க கப்ரு வணக்கமுறைகளை ஆதரிப்போர் எடுத்து வைக்கும் மேற்கூறப்பட்ட வாதங்களை குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் ஆராய்வோம்.

1) இறைவனுக்கு உவமை மனிதர்களில் உள்ள நீதிபதியா?
இறைநேசர்களிடம் கையேந்தி நிற்கும் முஸ்லிம்களில் சிலர் அவர்களுடைய அறியாமையினால், நாம் நீதிபதியிடம் வாதாடுவதற்கு நமக்கு ஒரு வக்கீல் தேவையில்லையா? அல்லது ஒரு பெரிய அமைச்சரிடம் நமது தேவையை கேட்டுப் பெறுவதற்கு அவருக்கு நெருக்கமானவரை பரிந்துரை செய்வதற்காக நியமிப்பதில்லையா? அது போலத்தான் நாங்களும் இறைவனிடம் வாதாடி, கேட்டுப் பெறுவதற்காக இறைவனுக்கு நெருக்கமான இறைநேசர்கள் மூலம் வேண்டுகிறோம் என்று கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது இஸ்லாத்தை பற்றி அவர்கள் ஓரளவுக்கு கூட அறியாமல் இருப்பதே காரணம் ஆகும். நீதிபதி நாம் குற்றம் செய்தவாகளா அல்லது நிரபராதியா என்பதை நமக்காக வாதாடும் வக்கீல் எடுத்து வைக்கும் சாட்சியங்களை வைத்தே அறிந்து கொள்வார். அதுவும் சாட்சியங்கள் சரிவர நிருபிக்கப்படாவிட்டால் நிரபராதிக்குக் கூட தண்டணையளிக்கும் எத்தனையோ நீதிபதிகள் இருக்கிறார்கள்.
இது இப்படியிருக்க அகிலங்களையெல்லாம் படைத்து பரிவக்குவப்படுத்தி பாதுகாத்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு நமது தேவைகள் என்ன என்பது தெரியாதா? இதயங்களில் உள்ள இரகசியங்களை அறிபவனாக அல்லாஹ் இருக்கிறான் என்று தன்னுடைய திருமறையிலே பல இடங்களில் இறைவன் கூறுகின்றானே!!!

 
“வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிகிறான்; நீங்கள் இரகசியமாக்கி வைப்பதையும், பகிரங்கமாக்கி வைப்பதையும் அவன் அறிகிறான்; மேலும், இருதயங்களிலுள்ளவற்றை யெல்லாம் அல்லாஹ் அறிகிறான்(அல்குர்ஆன் 64:4)

 
இன்னும் பல வசனங்களில் 11:5, 67:13, 28:69, 2:284 அல்லாஹ் மட்டுமே இதயங்களிலுள்ள இரகசியங்களை அறிகிறான் என்றும் மற்ற யாரும் அவற்றை அறிய முடியாது என்றும் கூறுகின்றானே!. நாம் கூறாமலே நமது தேவைகளை அறிந்திருக்கும் இறைவனுக்கு, கேவலம் மனிதர்களிலுள்ள ஒரு வக்கீலோ அல்லது அதிகாயோ எடுத்துச் சொன்னால் தவிர அறிந்துக் கொள்ள முடியாமல் இருக்கின்ற நீதிபதியையும், அமைச்சரையும் நாம் எப்படி உதாரணங்களாக கூறமுடியும்?. இது இறைவனின் கண்ணியத்தைக் குறைவாக கருதுவதாகாதா? இறைவனுக்கு நீதிபதியையும், அமைச்சரையும் உதாரணங்களாக கூறி அல்லாஹ்விற்கு உவமைகளை ஏற்படுத்தி இணைவைத்த மாபாதகம் ஆகாதா? இவ்வாறு இறைவனுக்கு உதாரணங்களைக் கூறுபவர்களை அல்லாஹ் கடுமையான எச்சரிக்கின்றான்:
“ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்” (அல்குர்ஆன் 16:74)

 
ஆகவே அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறுவது இந்த திருமறை வசனத்தை மீறிய மாபெரும் குற்றமாகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே. அல்லாஹ் தன்திருமறையில் அல்லாஹ்வையே அழையுங்கள் என்றும், அவன் பிரார்த்தனை புரிபவர்களின் பிரார்த்தனையைச் செவியேற்கிறான் என்றும் ஆனால் உங்களால் அழைக்கப்படுபவர்களால் பதிலளிக்க முடியாது என்று பல இடங்களில் வலியுறுத்திக் கூறுகின்றான்.
“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!” (அல் குர்ஆன் 7:194)

 
2) நாங்கள் கேட்பதெல்லாம் கிடைக்கிறது:-
இதுவும் அறியாமையினால் கூறப்படும் அர்த்தமற்ற வாதமாகும். நாம் பிற சமுதாயத்து மக்களிடம் அவர்கள் குல தெய்வம் என்று ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தெய்வத்தை வழிபடுவதைக் காணலாம். அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால், எங்கள் குலதெய்வம் சக்திவாய்ந்தது, அது நாங்கள் கேட்பதையெல்லாம் கொடுக்கிறது. அதனால் தான் நாங்கள் அதை தொடர்ந்து வழிபடுகிறோம் எனக் கூறுவர். இன்னும் சிலர் அத்தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக அத்தெய்வங்களின் உண்டியலில் கோடிக்கணக்கில் காணிக்கைகளைச் செலுத்துவர். அவர்கள் கூறுவது போன்று அவர்கள் வேண்டிக்கொண்டவைகளில் சில நடைபெறுவதால் தான் அவர்கள் அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்றனர். இதைப் போலவே நமது சமுதாயத்து மக்களில் சிலர் அவரவர் நம்பிக்கைகளுக்கு ஏற்ப பிடித்தமான அவ்லியாக்களை எடுத்துக் கொண்டு அவர்களை தங்களின் குல அவ்லியாகவாக? ஆக்கி வைத்துக் கொள்கின்றனர். பிற சமுதாயத்தவர்கள் கூறுவதைப் போல இந்த அவ்லியாக்களும் எங்களின் தேவைகளை எல்லாம் நிறைவேற்றித் தருகின்றனர் எனக் கூறுகின்றனர். நிச்சயமாக இவைகள் எல்லாம் ஷைத்தானின் தீய சூழ்ச்சிகளாகும். அந்த அவ்லியாக்களிடம் நர்ச்சை செய்தால் நிறைவேறுவது போல பிற சமுதயத்து வழிபாட்டுத்தலங்கிலும் நோச்சை செய்தாலும் தான் அவர்களுக்கு சில நாட்டங்கள் நிறை வேறுகின்றன. அதற்காக அங்கேயும் செல்வார்களா?


ஒவ்வொரு காரியமும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என அல்லாஹ் கூறுகிறான். நமக்கு நடக்கும் நல்லவைகளும், கெட்டவைகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்று நாம் நம்பிக்கை கொள்வோமேயானால் இணைவைக்கும் இது போன்ற செயல்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவான்.


3) வரம்பு மீறிய பாவிகளையும் மன்னிப்பவன் அல்லாஹ்வே:-
நாங்கள் பாவங்கள் பல செய்த பாவிகள், ஆகவே எங்களின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே பாவங்களே செய்யாத இறை நேசசெல்வர்களிடம் எங்களின் தேவைகளைக் கூறினால் அவர் எங்களுக்காக இறைவனிடம் பரிந்துரைத்து எங்களின் தேவைகளைப் பெற்றுத்தருவார்கள் எனக்கூறுகின்றனர் கப்ரு வணக்க முறைகளை ஆதரிக்கும் முஸ்லிம்களில் சிலர். இதுவும் இஸ்லாத்தின் அடிப்படையைப் புரிந்துக் கொள்ளாதவர்களின் வாதமாகும். நாம் பாவங்கள் நிறைய செய்தவர்களாக இருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் என்று ஒவ்வொரு செயலின் துவக்கத்திலும் கூறிடும் நாம் அதன் பொருளை புரிந்துக் கொள்வதில்லை. அல்லாஹ் மிகப்பெரும் கருணையுடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான் என்று திருமறையின் பல இடங்களில் கூறுகின்றான்.
அல்லாஹ் கூறுகிறான்:-


‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 39:53)


மேற்கண்ட வசனத்தில், ஒருவர் எவ்வளவு தான் பாவங்கள் செய்திருப்பினும், அவர் அல்லாஹ்வுக்கே முற்றிலும் வழிபட்டு தம் பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பதாகக் கூறுகின்றான். ஆனால் பாவம் செய்தவருடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்று கூறுவது மேற்கண்ட வசனத்தை நிராகரித்தல் ஆகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதாகளே!


4) நல்லடியார்களின் பிரார்த்தனை இறைவனால் மறுக்கப்படாது. அதனால் அவர்கள் மூலமாகக் கேட்கிறோம்:-
இது கப்ரு வணக்க முறைகளை ஆதரிக்கும் இன்னும் சிலரின் வாதமாகும். முதலில் நாம் சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ளவேண்டும். பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் இறைவனின் விருப்பம். அதில் இறைவனை கட்டாயப்படுத்த யாராலும் முடியாது. நபி (ஸல்) அவர்களுக்கே அவர்கள் விரும்பியது சில நேரங்களில் கிடைக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் தம் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இஸ்லாத்தை எப்படியாயினும் ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்று ஆவலாக இருந்தாகள். ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் வேறொன்றாக இருந்ததால் இறுதி வரை நபி (ஸல்) அவர்களின் விருப்பத்தை இறைவன் நிறைவேற்றித்தரவில்லை என்று வரலாறுகளில் படித்திருக்கின்றோம். இது ஒருபுறம் இருக்க அமல் செய்ய யாரால் முடியும் என்பதைச் சற்று சிந்திக்க வேண்டும். ஒருவர் உயிருடன் இருக்கும் வரையில் தான் அவரால் பார்க்கவும், கேட்கவும், அமல் செய்யவும் முடியும். அவர் இறந்து விட்டால் அவரால் எந்த ஒரு அமலையும் செய்யமுடியாது. அவருக்கும் இவ்வுலகத்திற்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. இதை திருமறை வசனங்களும், ஹதீதுகளும் உறுதி செய்கின்றன. எனவே அமல்களில் ஒன்றாகிய பிரார்த்தனையை நமக்காக இறைவனிடம் என்றோ இறந்துவிட்ட நல்லடியார்கள் செய்கின்றார்கள் என்றால் அது பின்வரும் குர்ஆன், ஹதீஸ்களுக்கு முற்றிலும் எதிரான கருத்தாகும்.

 
அவர்கள் இறந்தவாகளே உயிருள்ளவர்கள் அல்லர் என்று அல்லாஹ் கூறுகின்றான்:-
“அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்” (அல் குர்ஆன் 16:20-21)
                                                                                       
                                                                                            தொடரும் ....   

                                                                                   இன்ஷா  அல்லாஹ்...  
                                                                                                  

                                              

 உங்கள்   சகோதரி
  ஆயிஷா  பானு.

11 September 2011

நான் தான் திருக்குர்ஆன் பேசுகிறேன்...

 

அஸ்ஸலாமு  அழைக்கும்  வரஹ்மதுல்லாஹி  வபரகாத்துஹு  


என்   இனிய   இஸ்லாமிய   சொந்தங்களே  !  உங்கள்  மீது  இறைவனின்  சாந்தியும்  சமாதானமும்  என்றென்றும்  நிலவிட  வேண்டும்   என்பது  தான்  எனது  ஆவல். அதற்காகத்தான்   நானும்  உங்களுக்காக   இறைவனிடமிருந்து  இறக்கி  அருளப்பட்டிருக்கிறேன்.  நான்   சுவர்கத்தின்  லவ்ஹூல்  மஹ்பூல்   என்னும்   ஏட்டில்   வசித்து   வருபவன். இவ்வுலகில்   நான்  முதன்முதலில்  
ஆரத்தழுவி    கட்டி  அனைத்து  முத்தமிட்டது    நமதருமை  நாயகம் { ஸல் } அவர்கள் . மனிதர்கள்  அனைவரும்  என்னை  முத்தமிடுவீர்கள் . ஆனால்  நானோ  எம்பெருமானாரை  முத்தமிட்டவன்.


என்னை   சுமப்பதற்கு  நாயகம் {ஸல்} அவர்கள்  பட்ட  ஆரம்பம்  கட்ட  சிரம்மத்தை   நானும்   எனது  இறைவனுமே   நன்கு  அறிவோம்.  அதனை  சாதாரண   மனிதர்களாகிய   நீங்கள்  உணர்ந்து  கொள்ள  மாட்டீர்கள்.   இத்தனை   நெருக்கடிக்குள்ளும்   என்னை  சுமந்து   எனது  பெருமைகளை உணர்ந்து   எனது  சகவாசம்  உலகம்  அழியும்  வரைக்கும்  வாழக்கூடிய  நமது  உம்மத்தினர்  அனைவருக்கும்   வேண்டும்  என்பதற்காகத்தான்   ஆரம்பத்தில் 
என்னை  மாட்டுத்  தோலிலும்,மரக்கட்டைகளிலும்   என்னை  பதிய  வைத்து 
என்னை  ஓர்  பொக்கிஷமாக  உங்களிடம்   ஒப்படைத்து  உள்ளார்கள்  நாயகம் {ஸல்} அவர்கள்.  ஆனால்  நீங்களோ  எனது  சகவாசத்தை  விரும்பாமல், சைத்தானின்   சகவாசத்தை  விரும்ப  கூடியவர்களாக  ஆகிவிட்டீர்கள்..
"கூடாய்  நட்பு   கேடாய்  முடியும்  என்ற  பழமொழி " மறந்து  விட்டதோ ?

  
என்னை   மறக்க   ஆரம்பித்ததும்   எவ்வளவு   இழிவுகளையும்  சோதனைகளையும்  சந்தித்து   வருகிறீர்கள். எனது  சிறப்பைப் பற்றி   ஒரே  வழியில்  சொல்வதென்றால்  "ஹுதன்னில்  முத்தகீன்" இறையச்ச          முடையவர்களுக்கு   நேர்வழி  காட்ட  கூடியவனாக  இருக்கிறேன். யார்  என்ன  நம்பி  பின்  பற்றினாலும்   நிச்சயம்  நான்  அவர்களை   ஈருலகிலும்  நல்லோர்களாக  வாழச்செய்வேன்  என்பதை  அளவு  கடந்த  உறுதியுடன்  என்னால்  கூற  முடியும்.


இன்று  யார்  யாருக்கோ  பின்னால்  போய்  கொண்டிருக்கும்  மனிதர்களே !
அவர்களெல்லாம்  நாளை  மறுமையில்  உங்களுக்கு  துணை  நிற்பவர்கள்  என  நினைத்தால்   ஏமாந்து  தான்  போவீர்கள்.


டி.வி, என்ற  இப்லீஸின் நாசகார  கவர்ச்சி பெட்டிகள்  வருவதற்கு  முன்பெல்லாம்   வீடு தோறும்  குடும்ப   பெண்கள்  அதிகாலையே  எழுந்து சுபுஹு   தொழுகையை  முடித்து  விட்டு  என்னை  கரத்தில்  ஏந்தி  கம கமக்கும் 
சந்தன  ஊது  பத்தியின்  புகையில்  எனது  வசனங்களை  ஓதும்  போது  வெளியாகும்  அந்த  இனிமையான  ஓசை  தென்றல்  காற்றோடு  கலக்கும்  ரம்மியம்  தானே.  அன்றைய  மக்களின்  சங்கீதமாய்  இருந்தது.  ஆனால்  இன்றோ  நள்ளிரவு  வரை   டி.வியில்   தொடர்  சீரியலை  பார்த்து  விட்டு
உறங்குவதால்  பள்ளியில்  கூறப்படும்   அதிகாலை  பாங்கின்  ஓசைக்கு  எதிர்
ஓசையாய்   உனது   குறட்டை   சத்தம்  வெளியாவது   இறைவனின்  கோபத்திற்குரியதல்லவா? ஓ  ஜெயனும்பு  பீவியே  படைத்தவனையே  மறந்து  விட்ட  நீ  என்னையா  கையில்  எடுத்து   ஓதப்போகிறாய்?

 
எனதருமை   தெரியாத  மனிதர்களே !  என்னைப்பற்றி   அல்லாஹ்வின்  தூதர்
[ஸல்] அவர்கள்   கூறுவதைக்  கேளுங்கள். "திருக்குர்ஆனிலிருந்து  சிறதளவு  கூட  தம்  உள்ளத்தில்  மனனம்  இல்லாதவர்  பாழடைந்த  வீடு  போன்றவர்  ஆவார் "



என்னை  ஓதினால், பிறர்  ஓதக்  கேட்டால், மனனம்  செய்தல்   என  ஒவ்வொன்றுக்கும்   இறைவனிடத்தில்  நற்கூலி  கிடைக்கும்  என்பதை  மறந்து  விட்டீர்களா? வருட  முழுவதும்  என்னை  நினைத்து  வாழ்ந்த  நீங்கள்,
இன்றோ  வருடத்தில்  ஒரு  மாதம்  ரமளானில்  மட்டுமே  நினைக்க  கூடியவர்களாக  ஆகி  விட்டீர்கள்.உன் போன்ற  சந்தர்ப்ப  வாத  வேடதாரிகளை  நாளை  மறுமையில்  எனது  இறைவனுக்கு  முன்பாக  தோலுரித்து   காட்டுவேன்   என்பதை  நினைவில்  வைத்துக்  கொள்.


அறிவுள்ளவர்களுக்கு  மட்டும்   உறுதியாக  ஒன்றை  சொல்லிக்  கொள்கிறேன்.
யார்  என்னை  தங்களது  நெஞ்சத்தில்  வைத்து   பாதுகாககிறார்களோ? அவர்களின்  மரணத்திற்கு  பின்  மண்ணறை  வாழ்க்கையின்  போது  வேதனையை  விட்டும்  கொடிய  விஷமுள்ள  பாம்பு,  தேள் போன்ற  ஐந்துகளின்  தீங்கை  விட்டும்   நான்  அவர்களை  பாதுகாப்பேன்.  நாளை  மறுமையிலும்  இறைவனிடம்  பரிந்துரைப்பேன்.


என்னை  சுமந்து  வாழும்  இதயங்கள்  மட்டுமே   ஈருலகிலும்  ஒளிமயமாக  இருக்கும். என்னைபற்றி  இவ்வளவு  கூறிய  பிறகும்  தினந்தோறும்  நீ  என்னை
உன்  இதயத்தில்  சுமக்க  மறுத்தால்  நஷ்டம்  எனக்கல்ல. உனக்குத்தான்  என்பதை  நினைவில்  வைத்துக்கொள் !


                                                                                                         நன்றி
                                                                                  மாமா  ஹமீது  சுல்தான்  அவர்கள் 

-------------------------------------------------------------------------------------------------------------

அவர்களுடைய   தாவா   பணிகளைப்   பற்றி .....


அஸ்ஸலாமு அலைக்கும்..

கடந்தஒரு மாத காலமாக பல பயனுள்ள இஸ்லாமியத் தகவல்களை,கட்டுரைகளை மின் நூல்களாகத் தொகுத்து தங்களுடன் பகிர்ந்து கொண்டது மனதுக்கு நிறைவளிக்கிறது. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!
 
 இன்று உங்களில் பலர் வேலை நிமித்தம் அவைகளை Download செய்யாமல் கூட இருக்கலாம். தயவு செய்து நேரம் ஒதுக்கி அவைகளை பதிவிறக்கம் செய்து படித்துப் பயனடைய வேண்டுகிறேன். இதுவரை உங்களுடன் பகிர்ந்து கொண்ட நூல்களைப் பற்றி உங்களின் கருத்தினை ஒற்றை வரியிலாவது எழுதி அனுப்புங்கள். இது போன்ற தாவாப்பணி தொடர எனக்கு தெம்பாக இருக்கும். பல சகோதரர்கள் மவுனம் சாதித்தனர். ஒர் சிலர் கருத்துக்களை தெரிவித்தனர்.(அவர்களுக்கும் இவ்வேளை நன்றி).
இப்புனித ரமலான் மாதத்தில்,மட்டும் மொத்தம் 39,19,423 மெயில்கள், 25 குழுமங்கள் மூலமாக அனுப்பியிருக்கிறேன். இதில் 6 ஆங்கில குழுமங்கள் மூலமாக அனுப்பிய மெயில்கள்: 27,26,098. (ஆங்கிலம் மட்டும்)
தமிழும் ஆங்கிலமும் சேர்த்து 19 தமிழ் குழுமங்கள் மூலமாக அனுப்பிய மெயில்கள்:11,93,325.
இதில் முழுக்க முழுக்க தமிழ் பதிவுகள் மட்டும் 7,26,000 மெயில்கள்.
இதற்காக தினமும் செலவழித்த காலம்:16-18 மணி நேரங்கள்.
75க்கும் மேற்பட்ட ரமலான் சம்பந்தமான மின் நூல்களைத் (English and Tamil)தொகுத்து
.அனுப்பியுள்ளேன். அனைத்து மெயில்களும் குழுமங்களிலிருந்து வெளியான பிறகு உள்ள தகவல் இது.29உறுப்பினர்களைக் கொண்ட சிறிய குழுமம் முதல் 45,000 உறுப்பினர்களைக் கொண்ட பெரிய (masjidnabwi/medina university) குழுமம் வரையில் அனைத்து பதிவுகளும் வெளியாயின.
சென்னையில், புதுப்பேட்டையில் ஒரு அறையிலிருந்து மாத முழுவதும் 39 இலட்சத்துக்கும் மேற்பட்ட மெயில்கள் சென்றடைந்திருக்கின்றன. அல்ஹம்துல்லில்லாஹ்….


உடல் நிலையைப் பொறுத்த வரை மருத்துவர்கள் கைவிட்ட நிலையிலும், ஏக இறைவன் கருணையினால் ஆயுள் நீடித்த நிலை. இதை அனுதாபத்தை வேண்டியோ, பெருமைக்காகவோ, முகஸ்துதிக்காகவோ சொல்லவில்லை. தாவாப் பணியினை எங்கிருந்தும், எப்போதும், எந்த நிலையிலும், எப்படியும்  செய்ய முடியும் என்பதற்காக இதை எழுதுகிறேன். அந்த வகையில் நான் தாவாப் பணியை செய்ய எடுத்துக் கொண்ட முறை தான் இணைய தளமும், மின் அஞ்சல் வழியும். கடந்த 6 வருடங்களாக இப் பணியினை செய்து வருகிறேன். 250க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மின் நூல்களை (ஸஹீஹ் புஹாரி,முஸ்லிம்,குர் ஆன் (தமிழ், ஆங்கிலம்), மருத்துவ கையேடுகள் போன்றவைகளை ஆக்கம் செய்து நம் சமுதாய மக்களுக்கு தொடர்ந்து அனுப்பி வருவதுடன், எனது இணைய தளமான www.tamilislam.webs.com மூலமாக இலவசமாகவும் வழங்கி வருகிறேன். இப்போது ஸஹீஹ் முஸ்லிம் இரண்டாம் பாகம் தமிழில் மின் நூலாக தொகுக்கும் பணியினை தொடங்கியிருக்கிறேன்.
இனியும் இன்ஷா அல்லாஹ் இப் பணி தொடரும்..


அனுப்பிய மெயில்களில் எத்தனை மெயில்கள் எத்தனைப் பேரால் திறக்கப் பட்டது என்பது அவன் ஒருவனுக்கு மட்டுமே தெரியும். இருப்பினும் நான் எனது கடமையாக நல்லதை எத்தி வைத்து விட்டேன். அதற்கான கூலியை இறைவன் எனக்கு அருள்வான்.இன்ஷா அல்லாஹ்.

மெயில்களை திறக்க மனதில்லா மனங்களை இவ்வேளை யா அல்லாஹ் திறந்து வைப்பாயாக!
இடையிடையே சில சகோதரர்கள், நான் ஏகத்துவத்தை எடுத்துக் கூறியதற்காக என்னை தரமற்ற வார்த்தைகளால் மெயில்கள் மூலம் சாடியதும் உண்டு. அவர்களது மனங்களிலும் அல்லாஹ் ஏகத்துவத்தை துளிர் விடச் செய்வானாக!


இந்த ரமலானில் நம்மிடையே இருப்பவர்கள் நான் உட்பட வரும் ரமலானில் இருப்போமா என்ற நிச்சயமற்ற நிலை. இன்ஷா அல்லாஹ் ஆயுள் நீடித்திருந்தால், மீண்டும் வரும் ரமலானில் சந்திப்போம்.
இறுதியாக சகோதரர்களே! உங்களது பிரார்த்தனைகளில் இந்த ஏழை சகோதரனுக்காக, என் உடல் நலத்திற்காக, மீண்டும் என் தாவாப் பணி சிரமமின்றி தொடர மறவாமல் துவா செய்ய வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்..

 
இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைக்கும் போது மின்னஞ்சல் மூலம் சந்திப்போம். வரும் ரமலானில் இது போன்று தினமும் சந்திப்போம். அது வரை நம் அனைவர்களின் ஆயுளையும் நீட்டித்து தர எல்லாம் வல்ல இறையோனை வேண்டுவோம்.
 
உங்கள் அனைவருக்கும் துவாச் செய்தவானாக நிறைவு செய்கிறேன்.
 
தங்களன்புள்ள,
Engr.சுல்தான்
சென்னை 2  ---------------------------------------------------------------------------------------------------------

அல்ஹம்துலில்லாஹ் ...


அவர்களுடைய   ஆக்கங்கள்  எல்லாம்  என் மெயிலுக்கும்  வந்தன.      எதையும்   காப்பி&பேஸ்ட்   பண்ண  முடியாது.  அனைவருக்கும்  சென்றடைய வேண்டும்  என்பதற்காக   இதை   என்  வலைப்பூவில்      வெளியிட்டுள்ளேன்.


இன்ஷா  அல்லாஹ்... இனி  அவர்களுடைய  ஆக்கங்கள்  சில  என் பதிவில்...


//சகோதரர்களே! உங்களது பிரார்த்தனைகளில் இந்த ஏழை சகோதரனுக்காக, என் உடல் நலத்திற்காக, மீண்டும் என் தாவாப் பணி சிரமமின்றி தொடர மறவாமல் துவா செய்ய வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்..//



அனைவரும்     துஆ      செய்யும்படி     அன்புடன்      வேண்டிக் கொள்கிறேன் !